Skip to main content

தரங்கை – பெயர்க்காரணம்:

தரங்கை – தரங்கம்பாடி என்ற ஊரின் சுருக்கமான பெயர். இவ்வூரில்தான் சீகன்பால்கு என்ற ஜெர்மானிய கிறிஸ்தவர் தமிழினைக் கற்றறிந்து இந்திய மொழிகளுக்கெல்லாம் முன்னோடியாக தமிழை அச்சேற்ற வேண்டிய கட்டமைப்பை நிறுவினார். லத்தீன் மற்றும் ஐரோப்பிய மொழிகளுக்கு குட்டன்பெர்க் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அவ்வாறு தமிழ் மற்றும் இந்திய மொழிகளுக்கு தரங்கை முக்கியத்துவம் வாய்ந்தது.

என் தந்தை இவ்வூரிலே படித்தார், என் திருமண வரவேற்பும் இவ்வூரில் தான் நிகழ்ந்தது. ஆக என் வாழ்விலும் மிக முக்கியமான ஊராகவும் உள்ளது.

தரங்கை திட்டத்தின் தோற்றம்:

2007ம் ஆண்டில் எனக்கு தமிழில் பிரிட்டிஷ் சமச்சீர் குறுக்கெழுத்து போட்டிகளை (British Symmetrical Crossword) உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது. காரணம் தமிழ்ப் பத்திரிகைகளில் உள்ள குறுக்கெழுத்து போட்டிகள் சிறியதாகவும், சமச்சீரற்றவையாகவும் உள்ளன. மேலும் இடமிருந்து வலம் மற்றும் மேலிருந்து கீழ் என்று மட்டுமல்லாமல் வலமிருந்து இடம் மற்றும் கீழிருந்து மேல் என்றும் நிரப்பப்பட வேண்டியதாய் உள்ளது. அது மட்டுமல்ல அப்படி நிரப்பப்படும்போது இரு வார்த்தைகள் தொடும் இடங்களில் புதிதாக அர்த்தமற்ற வார்த்தைகளும் உருவாகின்றன. ஸ்க்ரேபிள் (Scrabble) போன்ற விளையாட்டுக்களில் இப்படிப்பட்ட வார்த்தைகள் உருவாகுதல் ஏற்கப்படாததாகும்.

            ஆங்கிலத்தில் சமச்சீர் குறுக்கெழுத்துக்களை உருவாக்க முடிவதற்கு, ஆங்கிலத்தில் உயிர்மெய் எழுத்துக்கள் இல்லாதது ஒரு மிகப் பெரிய காரணம். ஆங்கில எழுத்துக்களை ஆல்ஃபபெட் (Alphabet) என்று மொழியியலாளர்கள் வகைப்படுத்துகிறார்கள். உயிர்மெய் உள்ள இந்திய மொழிகளை அபுகிடா (Abugida) என்று வகைப்படுத்துகிறார்கள். இதைத்தவிர உயிர் எழுத்துக்களே இல்லாத அல்லது முக்கியத்துவம் தரப்படாத அரபு, எபிரேயம் போன்ற அப்ஜத் (Abjad) என்ற மொழி வகையும் உண்டு.

            தமிழ் வார்த்தைகளை உயிர், மெய் என்று பிரித்து எழுதுவது நாம் அனைவரும் அறிந்ததே. இந்த முறையில் குறுக்கெழுத்துக்களை உருவாக்கினால் என்ன என்ற யோசனை வந்தது. ஒரு எக்ஸல் விரிதாளினில் ஸ்கிரேபிள் போல ஒரு வார்த்தை பின்னலை உருவாக்கினேன். எளிதாக இருந்தது. ஆனால் படிப்பதற்கு கடினமாக இருந்தது. காரணம் தமிழ் எழுத்துக்களை உயிர்மெய் எழுத்துக்களுடன் படித்துப் பழகியிருந்ததுதான் என்பதை அறிந்து கொண்டேன். மேலும் விடைகளை எழுதும்போது எழுதும் நேரமும் அதிகமாக ஆனது. உதாரணமாக, “தமிழ்” என்ற வார்த்தையை “த்அம்இழ்” என்று எழுதவேண்டும். ஏறக்குறைய இரு மடங்கு சிரத்தை எடுக்க வேண்டியுள்ளதைக் காணலாம்.

            2008ல் எனக்கு திருமணம் ஆகி இந்த யோசனையை சற்று மறந்துபோனேன். அடிமனதில் அவ்வப்போது யோசனைகள் வரும். 2012ல் என் முதல் பிள்ளைக்கு இரண்டு வயதானபின் சற்று ஓய்வு கிடைக்க மீண்டும் ஒரு ஆர்வம் வந்தது.

            இப்போது இன்னொரு யோசனை இருந்தது. உயிரெழுத்துக்களுக்கு பதில் உயிர்மெய் குறியீடுகளைக் கொண்டு எழுதும்போது எளிதாக எழுதலாம் என்று தோன்றியது. இன்னும் ஒரு மாற்றமாக மெய்யெழுத்துக்களின் புள்ளியை எடுத்துவிட்டு அகர உயிரெழுத்துக்கு ஒரு புதிய குறியீட்டினைத் தந்தேன். இப்போது “தமிழ்”, “தமிழ” என்று மாறிவிடும். படிப்பதற்கு சற்றே சுலபமாக இருந்தது.

            எல்லா உயிர் எழுத்துக்களின் குறியீடுகளை உபயோகிக்கும்போது உ, ஊ, ஐ, ஒ, ஓ, ஔ ஆகியவற்றின் குறியீடுகள் உயிர்மெய்யெழுத்துக்களுடன் சேர்ந்து வருவதாலும் அல்லது உயிர்மெய்யெழுத்துக்களின் முன் வருவதாலும் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குறியீடுகள் உள்ளதாலும் அவைகளுக்கு புதிய குறியீடுகள் கொடுக்க வேண்டியதாக இருந்தது. இப்படி மாற்றங்கள் அதிகமாக அதிகமாக, எல்லா குறியீடுகளுக்கும் எளிதாக விளங்கக்கூடிய அதே சமயம் எளிதாக எழுதக்கூடிய குறியீடுகள் கொடுக்கலாம் என்று நினைத்தேன். ஐ மற்றும் ஔ இரண்டும் இரட்டையுயிர் எழுத்துக்கள் (diphthongs). தமிழில் ‘ஐ’யை ‘அய்’ என்றும் ‘ஔ’வை ‘அவ்’ என்றும் எழுதலாம் என்று நினைத்தேன். ஏனென்றால் குறுக்கெழுத்து விளையாட இந்த மாற்றம் சுவாரசியத்தைக் கூட்டும். (இந்த யோசனையை முதலில் சொன்னது தந்தை பெரியார் என்று படித்திருக்கின்றேன்) அதனால் இவ்விரண்டைத் தவிர மற்ற உயிர் எழுத்துக்களுக்கு புதிய குறியீடு வடிவம் கொடுத்தேன். இப்போது அஆஇஈஉஊஎஏஒஓ ஆகிய எழுத்துக்களுக்கு  ஆக மாறினது.

            உயிரெழுத்துக்களைப் போல மெய்யெழுத்துக்களையும் எளிமையாக்கி தமிழ் எழுத்துக்களில் இருந்து வேறு பிரித்தல் நல்லது என்ற சிந்தனை இப்போது வந்தது. க்ங்ச்ஞ்ட்ண்த்ந்ப்ம்ய்ர்ல்வ்ழ்ள்ற்ன் என்னும் எழுத்துக்களை  என்று அவைகளின் வடிவங்களைத் தழுவியே மாற்றினேன். ஆயுத எழுத்தில் புள்ளிகளை ஒன்றிணைத்தேன் ().

            இப்படி உயிர்மெய் எழுத்துக்களை பிரித்து குறுக்கெழுத்துக்களில் பயன்படுத்துவது தமிழில் மட்டுமே எளிதாக செய்யமுடியும். மற்ற இந்திய மொழிகளில் வல்லின எழுத்துக்கள் குரலற்ற மூச்சற்ற (unvoiced unaspirated), குரலற்ற மூச்சுடைய (unvoiced aspirated), குரலுடைய மூச்சற்ற (voiced unaspirated) மற்றும் குரலுடைய மூச்சுடைய (voiced aspirated) எழுத்துக்கள் என்று நான்காக பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு மொழியில் ஒரே எழுத்து பல ஒலிகளை பிரதிபலிக்கும்போது குறுக்கெழுத்து போன்ற வார்த்தை விளையாட்டுகளை உருவாக்குவது எளிதாகிறது. உதாரணமாக ஆங்கிலத்தில் ‘c’ என்ற எழுத்து க், ஸ், ச் போன்ற ஒலிகளை எழுத பயன்படுத்தலாம். இதனால் மேலிருந்து கீழ் விடையில் ‘க்’ என்ற ஒலியிலும் இடமிருந்து வலத்தில் ‘ச்’ என்ற ஒலியிலும் பயன்படுத்தமுடியும். அதேபோல தமிழில் வல்லினங்களை ‘க’ என்ற எழுத்தை குடல் என்றும், அடகு என்றும் முகம் என்றும் சற்று மாறிய ஒலிகளாக பயன்படுத்தலாம்.

            மற்ற இந்திய மொழிகளில் ஒவ்வொரு மெய் எழுத்தும் ஒரே ஒரு குறிப்பிட்ட ஒலிக்காக மட்டுமே பயன்படுத்துவதால், குறுக்கெழுத்து போன்ற வார்த்தை விளையாட்டுகளை உருவாக்குவது இன்னும் கடினமாகும். ஆனால் இப்படி ஒரே எழுத்து பல ஒலிகளை கொண்டிருப்பது வார்த்தை விளையாட்டுகளுக்கு சாதகமாக இருப்பினும், வார்த்தைகளை குழப்பமின்றி சரியாக உச்சரிக்கவேண்டிய சூழலில் சாதகமாக இல்லை. தமிழ் வார்த்தைகளுக்கு தமிழ் எழுத்துக்கள் சில விதிகளினால் சரியாக பொருந்தினாலும், பிற மொழி வார்த்தைகளை உச்சரிக்க தமிழ் எழுத்துக்கள் போதுமானதாக இல்லை. இந்த குறைபாடு பல நூற்றாண்டுகளாகவே உணரப்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக கிரந்த தமிழ் எழுத்துக்கள் உருவாக்கப்பட்டு அவற்றில் சில இன்றும் வட எழுத்துக்கள் என்று தமிழில் பயன் படுத்தப்பட்டு வருகின்றன. கிரந்த எழுத்துக்கள் பிற இந்திய மொழி வார்த்தைகளை ஓரளவு எழுத உதவினாலும், பிற நாட்டு மொழி வார்த்தைகளை சரியான உச்சரிப்புடன் எழுத போதுமானவையாக இல்லை. மேலும் அதிக எழுத்துக்கள் மனனம் செய்ய உகந்தவையாகவும் இல்லை.

            நான் உருவாக்கிய புதிய எழுத்துக்களை சரியான உச்சரிப்புடன் பிற மொழி வார்த்தைகளை எழுத பயன்படுத்த முடியுமா என்று யோசித்தேன். ஆனால் அதே சமயம், குறுக்கெழுத்துக்கள் உருவாக்க வேண்டிய மொழியின் நெகிழ் தண்மையை சமரசம் செய்ய விரும்பவில்லை. சில புதிய மாற்றி குறியீடுகள் மூலம் பழைய குறியீடுகளின் உச்சரிப்பை மாற்றலாம் என்று அறிந்தேன். இது ஒன்றும் தமிழுக்கு புதிதல்ல. ஆங்கிலத்தில் ‘fa’ என்ற ஒலியை தமிழில் எழுத ‘ஃப’ என்ற எழுத்துக்கள் பயன்படுத்துவதைப் போல பிற வல்லின எழுத்துக்களுக்கும் பயன்படுத்தலாம் என்று யோசித்தேன். ‘க’வினை ka, ga ha ஒலிகளுக்கும், ‘ச’வினை cha, ja, sa ஒலிகளுக்கும், ‘ட’வினை ta, da, za ஒலிகளுக்கும், ‘த’வினை tha, dha, zha ஒலிகளுக்கும், ‘ற’வினை tra, dra, rha (பின்னர் இவ்வொலிகள் சற்று மாற்றப்பட்டன) போன்ற ஒலிகளுக்கும் பயன்படுத்தலாம் என்று நினைத்தேன். ஆயுத எழுத்தில் மூன்று புள்ளி அல்லது சுழிகள் இருப்பதால் முதல் உச்சரிப்புக்கு ஒரு சுழியும், இரண்டாம் உச்சரிப்புக்கு இரண்டு சுழியும், மூன்றாம் உச்சரிப்புக்கு ஆயுதம் போல மூன்று சுழிகளும் பயன்படுத்தலாம் என்று முடிவுசெய்தேன். அவைகளுக்கு ‘ak’, ‘ag’ மற்றும் ‘ah’ என்றும் பெயரிட்டேன். இவற்றில் இருசுழியானது உயிரெழுத்துக்களின் ஒலியையும் மாற்றியமைக்க பயன்படுத்தப்படுகிறது. இவைகளை குறுக்கெழுத்துக்களிலும் தமிழ் வார்த்தைகள் எழுதுவதற்கும் பயன்படுத்தக்கூடாது என்று ஒரு விதி வகுத்தேன்.

            குறுக்கெழுத்துக்களை மேலும் சுவாரசியமாக்க சில பொதுக்குறியீடுகள் உருவாக்கினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. ஸ்கிரேபிள் விளையாட்டில் ஒரு வெற்றுக்காய் இருக்கும். அதற்கு மதிப்பெண் இருக்காது ஆனால் எந்த எழுத்துக்கு பதில் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படி ஒரு நீட்டல் குறியீடு, ஒரு மெல்லின குறியீடு மற்றும் ஒரு பொது குறியீடு உருவாக்கினேன். இதில் நீட்டல் குறியீடு குறில் உயிரெழுத்தை நெடில் உயிரெழுத்தாக மாற்றும். மெல்லின குறியீடு தனக்கு பின்வரும் வல்லினத்திற்குத் தக்கபடி தன்னை மாற்றிக்கொள்ளும். பொது குறியீடு ஸ்கிரேபிள் வெற்றுக்காய் போல உயிர் அல்லது மெய் எழுத்தாக பயன்படும். (பொது குறியீடு பின்னர் நீக்கப்பட்டது.) ஸ்கிரேபிள் போன்ற விளையாட்டில் இவை காய்களாக இருக்கும். குறுக்கெழுத்தில் குழப்பம் உண்டாக்கமல் இருக்க இவை ஏற்ற இடங்களில் அச்சிடப்படவேண்டும்.

            குறுக்கெழுத்துக்களை உருவாக்க கட்டங்களை வரைந்து உட்கார்ந்து யோசித்து நிரப்புவதற்கு பதில் கணினி மூலம் உருவாக்குதல் புத்திசாலித்தனமாகத் தோன்றியது. இப்போது இன்னொரு சிக்கல். கணிப்பொறியில் இந்த புதிய குறியீடுகளை எந்த நியமத்தில் (Standard) உபயோகிக்க வேண்டும்? இப்போது தமிழ் பெரும்பாலும் டிஸ்கி (TSCII) மற்றும் யூனிகோட் (Unicode) நியமங்களில் பயன்படுத்தப்படுகிறது. இவை இல்லாமல் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட டாம் (TAM) மற்றும் டாப் (TAB) நியமங்கள் உள்ளன. மிகவும் அறியப்பட்ட யூனிகோட் நியமத்தில் பயன்படுத்தலாம் என்றால், புதிய குறியீடுகளின் உயிர் எழுத்துக்களை யூனிகோடின் உயிர் எழுத்துக்களின் இடத்தில் நிரப்புவதா அல்லது உயிர்மெய்யெழுத்து குறியீடுகளின் இடத்தில் நிரப்புவதா என்ற கேள்வி எழுந்தது. குறுக்கெழுத்தில் நாம் உயிரெழுத்துக்களை பிரித்து எழுதுவதால் யூனிகோடிலும் உயிர் எழுத்துக்களின் இடத்தில் புதிய குறியீடுகளை புகுத்தினேன். (இவை எல்லம் ஆரம்ப கட்ட தவறான முயற்சிகள்)

            புதிய குறியீடுகளை கணிப்பொறியில் தட்டிட ஒரு மென்பொருள் தேவைப்பட்டது. அதனை கீமேன் கொண்டு வடிவமைத்தேன். அப்போது கீமேன் ஒரு மாத இலவச சோதனை மென்பொருளாக தரப்பட்டது. இந்த குறியீடுகளில் அவ்வப்போது மாற்று யோசனைகள் வந்து கொண்டு இருந்தபடியால் இறுதி வடிவம் கொடுக்கவில்லை. 2019ல் என் இரண்டாம் பிள்ளை இரண்டு வயதான பின்னர் சற்று ஓய்வு கிடைக்க மீண்டும் சில மாற்றங்கள் செய்து வெளியிடுகிறேன். இதில் முக்கியமான மாற்றம் ஒரு சுழி குறியீடு இப்போது பொது மெல்லின குறியீடாக மாறியது. பொது குறியீடு நீக்கப்பட்டது. ‘ஐ’யினை அய் என்று எழுதாமல் அஇ என்றும், ‘ஔ’வினை அவ் என்று எழுதாமல் அஉ என்று எழுதவும் விதி மாற்றப்பட்டது. மாற்றப்பட்ட வல்லினங்களின் ஒலியில் சில மாற்றங்கள். இப்படி உருவாக்கப்பட்டவை மொத்தம் 32 குறியீடுகள். இக்குறியீடுகளை கணிப்பொறியில் 5 ­பிட்களில் அடக்கிவிடலாம். மேலும் 3 பிட்களில் ஒலிமாற்றும் குறியீடுகள் பற்றிய தகவலை சேமிக்கலாம். இப்படி பல ஒலிகளை இந்த புதிய 32 குறியீடுகள் மூலம் சரியான உச்சரிப்புடன் எழுதலாம்.

            விளையாட்டுக்காக ஆரம்பித்து, பின்னர் பிற மொழி எழுத்துக்களை சரியான உச்சரிப்புடன் எழுத எண்ணி, பின்னர் கணிப்பொறிக்கும் பயன்படும் குறியீடுகளாக உருவெடுத்த இவ்வெழுத்துக்களுக்கு மென்தமிழ் என்று பெயரிட்டேன். கணிப்பொறியில் 2019ல் உருவாக்கப்பட்ட திருத்தப்பட்ட குறியீடுகள் மென்தமிழ் 1.0 ஆகும். மென் தமிழ் பற்றி முழு விவரங்களும் www.mtamil.com என்ற இணைய தளத்தில் காணலாம்.